கண்ணீரின் உப்புச்சுவை – ஜெகநாத் நடராஜன்

 கண்ணீரின் உப்புச்சுவை – ஜெகநாத் நடராஜன்

ஓவியம்: சீமா சாஹு

 

ரவானதும் வடிவு வீட்டு நடைவாசலுக்கு வந்துவிட்டால், ஒருவர் பின் ஒருவராக நான்கைந்து பேர் வந்து கூடிவிடுவார்கள். எல்லோரும் வீட்டுக்குள்ளேயே பகலில் முடங்கிக் கிடப்பவர்கள். பிறர் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளாதவர்கள். கோவில், குளம் போகாதவர்கள்.

வடிவின் மேற்குப் பார்த்த வீட்டு நடைவாசல் கூடத்தில் விசாலமான மூன்று கருங்கல் படிகள். ஓரமாய் இரண்டு பட்டியற் கற்கள் நேர்க்குத்து வாக்கில்… ஆறேழு பேர் தாராளமாக உட்காரலாம். மழை வந்தால் கூடத்திற்குள் செல்லலாம். உள்ளே சிமெண்டால் ஆன கட்டில் போன்ற திண்ணை. வெண்ணெய் போன்ற வழவழப்பு. ஐந்து ஆள் உயரத்தில் கொல்லம் ஓடு போட்டு, வெயிலோ குளிரோ உள்ளே வராமல் கச்சிதமாகக் கட்டியது அந்த நடுக்கூடம். அதைக் கடந்து, சிமெண்ட் போட்ட பெரிய வாசலையும் கடந்தால் வடிவின் வீடு. அவள் புருஷன் முன் நின்று கட்டிய பணச் செழிப்பைக் காட்டிக் கொண்டிருக்கும் வீடு.

வடிவு உட்பட அங்கு சந்தித்துகொள்ளும் எல்லோரும் அனேகமாகக் கிழவிகள்தான். தூக்கம் வராமல், பொழுது போகாமல், கடந்தகால வாழ்வின் நினைவு அடி நாக்கில் புரண்டு கிடக்கும் ஜென்மங்கள்தான். பகலில் தாயம் ஆடியது போக, ஒரு நாள் சமைத்து இரு நாள் உண்டது போக, அரைத்தூக்கமாய் தூங்கியது போக, இருக்கும் மீதிப் பொழுதை அந்த ஊரில் என்னதான் செய்ய. மாங்காய், நுங்கு, கருப்பட்டி என்று யாராவது ஒரு வியாபாரி தெருவில் கூவிக்கொண்டு வருவான். அவனை வளவுக்குள் வரச் சொல்லி ஒருத்தி வாங்க, நான்கு பேர் பேரம் பேசுவார்கள். பேரம் படிந்ததும் வடிவுதான் காசு கொடுத்து வாங்குவாள். எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பகிர்ந்து கொடுப்பாள். அவள் சாப்பிடும் நேரத்துக்கு அவள் வீட்டுக்குப் போனால்,”இரு சாப்பிடு’’ என்று உட்காரச் சொல்வாள். வேண்டாம் என்று மறுத்தாலும் சாப்பிடாமல் விடமாட்டாள்.

அவள் சமையல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ருசியோடு இருக்கும். மதியம் அவள் சாப்பிடும் நேரத்தைத்தான் கண்டுபிடிக்க முடியாது. அவள் சாப்பிடும் முன் அவள் கணவன் சாப்பிட வேண்டும். அவர் எப்போது தூக்கத்திலிருந்து எழுவார், சாப்பிடுவார் என்று சொல்ல முடியாது. காலைக்கும் மதியத்துக்குமாக அவள் சமைத்து வைத்துக் காத்திருப்பாள். பதினோர் மணிக்கு மேல் எழுந்தால் அவர் காலை உணவைச் சாப்பிட மாட்டார். அவர் சாப்பிடாமல் அவளுக்குச் சாப்பிட மனம் வராது.

எழுந்த பின் வெந்நீர் குளியல். சாமி கும்பிடு. ‘தினமணி’ பேப்பர் படித்து முடித்து பேப்பரை மடிக்கி வைத்து எழுந்தால் அவர் சாப்பாட்டுக்குத் தயார் என்று தெரியும். சாப்பாட்டுக்குப் பின்னால் வெற்றிலை, பாக்கு, புகையிலை என்று அன்றாடப் பாடுகள் அதன் பின் மீண்டும் தூக்கம்.

பாகம் பிரியாள் என்றுதான் வடிவின் பெயரைக் கிழவிகள் கிசுகிசுப்பார்கள். வடிவு அழகி. நீண்ட மயிர் வரம். ஆங்கில வெள்ளைத்தோல், அபூர்வமாக வரும் சிரிப்பு. சிரிக்கும்போது அங்கும் இங்கும் அசையும் கண்கள் காட்டும் வித்தை. வெள்ளைக்கல் மூக்குத்தி, கம்மல், கனத்த கைக் காப்புகள், முறுக்கு சங்கிலியில் மாங்கல்யம், பெரிய உடம்பில் எட்டு முழ சுங்குடி சேலை, உயரமாயும் அகலமாயும் வளர்ந்த கனத்த உடம்பு. அப்போதுதான் குளித்துத் தலைவாரிக் கொண்டவள் போன்ற தோற்றத்தில் எப்போதும் இருப்பாள். அடர்ந்த கத்திரிப்பூ வர்ணத்தில் குங்குமம் இடுவாள். ஏனென்று கேட்க எல்லோருக்கும் ஆசைதான். யாரும் கேட்டதில்லை. மகனும் மகளும் திருமணமாகி குழந்தை குட்டிகளுடன் வெளியூரிலிருக்கிறார்கள்.

விவசாய நாட்களில் மேற்பார்வைக்காக வடிவின் கணவர் வெயிலுக்கு முன் வயலுக்குக் சென்று வெயில் இறங்கியதும் திரும்பி வருவார். இரண்டு பம்ப்செட் கொண்ட ஆறேழு கோட்டை விதைப்பாடு வயல் அவருக்கு இருந்தது. வயலில் நெல் அறுத்து அடித்துக் குவித்தால் குட்டி மலைபோல இருக்கும் என்று சொல்லிக்கொள்வார்கள். மதியச் சாப்பாட்டை அடுக்குச் சட்டியில் யாராவது எடுத்து போவார்கள். அதில் திரும்பி வரும் மிச்சம்தான் அவளுக்கு மதியச் சாப்பாடு. எத்தனை மணி ஆனாலும் காத்திருப்பாள். அப்போது கூட வடிவு வெளியே வர மாட்டாள். வீட்டுக்குள் எதாவது வேலைகளைச் செய்து கொண்டிருப்பாள்.

மாலை நேரத்தில் வடிவு வீட்டு வாசலில், திண்ணையில் கூட்டம் கூடும். வடிவின் கணவருக்கு ஊரில் நல்ல மதிப்பு உண்டு. குடும்ப சண்டைகள், கொடுக்கல் வாங்கல், தண்ணீர் தகராறு என்று எதாவது பஞ்சாயத்துத் தினமும் நடக்கும். சண்டை, சத்தம். சச்சரவுக்குப் பின் அடங்கும்.

புருஷனின் பார்வைக்குப் படாமல் எங்காவது நின்று வடிவு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள். அபூர்வமாக அவர் அவளைப் பார்த்த கணங்களும் உண்டு.

நேரம் இரவு பத்து மணியைத் தொடும்போது. மெல்லியதாக மூன்று தோசைகள் வார்ப்பாள். அம்மியில் அதற்கு முன் தொட்டுக்கொள்ள எதாவது துவையல் அரைத்திருப்பாள். சாப்பாட்டுக்குப் பின் அவளே கறந்த பாலை காய்ச்சி நுரை பொங்க ஆற்றிக் கொடுப்பாள். அதன்பின் ரேடியோவில் அவர் கொஞ்சம் சங்கீதம் கேட்பார். நள்ளிரவுக்குக் கொஞ்சம் முன்னால் கதவு தாளிடப் பட்டு விளக்கு அணைக்கப் படும்.

அதிகாலையில் தொழுவத்தில் பசுக்கள் சத்தமிட்டு அவளை எழுப்பும்; கொல்லையிலிருக்கும் வைக்கோல் போரில் வைக்கோல் பிடுங்கி போடுவாள். பசுஞ்சாணம் கரைத்து வாசல் தெளித்து கோலம் போட்டு நிமிர்கையில் பொழுது விடிந்திருக்கும். பின் பால் கரப்பாள். பால் வாங்க, தயிர் வாங்க ஆட்கள் வருவார்கள். மிஞ்சிய தயிரைக் கடந்து வெண்ணெய் எடுத்து உரியில் போடுவாள். பின் சமைக்க ஆரம்பிப்பாள். வாரத்தில் ஒருநாள் முருங்கை இலை போட்டு நெய் உருக்குவாள். நாளின் பொழுதுகள் நகரும்.

 

தியப் பொழுதில் திடீரென்று வடிவு வாசலுக்கு வந்தாள் அவள் கணவர் வீட்டிலிருக்கிறார் என்று அர்த்தம். வாசலில் வடிவைப் பார்ப்பவர்கள் அவளை நோக்கி வருவார்கள். அவள் உள்ளே நடப்பாள். அவர்கள் அவளைப் பின் தொடர்வார்கள். விறகடுப்பில் பெரிய செப்புப்பானையில் வெந்நீர் கொதித்துக் கொண்டிருக்கும். அவள் ஒரு பக்கமும் வந்தவர்கள் ஒரு பக்கமுமாகச் சேர்ந்து தூக்கி அங்கணத்தில் வைப்பார்கள். பெரிய அங்கணம். கொஞ்ச நேரத்தில் அவள் கணவர் குளிப்பார், அவள் இலை அறுத்துக்கொண்டு வருவாள். அவர் சாப்பிடுவார். அதன்பின் அதே இலையில் அவள் சாப்பிடுவாள்.

அவள் வாசலுக்கு வந்ததைக் கவனித்தவர்கள் நேரத்தை மனக் கணக்கிட்டு, அவள் சாப்பிடும் நேரத்தில் அவளைப் பார்க்க வருவார்கள். பெரும்பாலும் கருப்பாயி ஆச்சிதான் நெளிந்த டம்ளரைத் தூக்கிக் கொண்டு மோர் வாங்க என்ற சாக்கில் வருவாள். வடிவோடு அமர்ந்து சாப்பிட்டுத் திரும்புவாள். சாப்பிட்ட வகைக்காக சின்ன சின்ன வேலைகளைச் செய்து கொடுப்பாள். கத்திரிக்காய், தக்காளி என்று அதற்கும் எதாவது வடிவு கொடுப்பாள். வடிவோடு சாப்பிட்ட கதையை இரவுச் சந்திப்பில் கருப்பாயி சொல்வாள். வடிவு தனக்கு மட்டும்தான் அப்படி செய்கிறாள் என்று அவள் பேச்சில் பெருமை பொங்கும். யார் போனாலும் அவள் அப்படித்தான் நடந்து கொள்வாள் என்று அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், கருப்பாயின் சாமர்த்தியம் அவர்களுக்கு வராது.

ஒரு நாள், “என்ன ஒரே சிரிப்பா இருக்கு’’ என்று கேட்டுக்கொண்டே வடிவு வந்தாள். எல்லோருக்கும் ஆச்சரியம். “அவுஹ வீட்ல இல்லையா வெளியூரு எதாவது போயிருக்காகளா?’’ என்று கேட்ட கேள்விக்கு, அவள் பதில் சொல்லவில்லை.

அன்று மட்டும் தற்செயலாக வந்ததாக எல்லோரும் நினைத்துக்கொண்ட போது, தொடர்ந்து தினமும் வர ஆரம்பித்தாள். முகம் தெரியாத இருள் கவிந்து கிடக்கும் அந்த இடத்தில் எல்லோரும் ஊரைக் கூட்டிச் சிரிக்கையில், அவள் சத்தமின்றிச் சிரிப்பாள்.

இரவு பத்து மணிக்குமேல் கடைசியாக ஊரைக் கடக்கும் பேருந்தில் யாராவது இறங்கி அவர்களைக் கடந்து நடந்தால், கருப்பாயி அவர்களை வம்புக்கு இழுப்பாள்.”வாங்கிட்டுப் போறதுல கொஞ்சம் குடுத்துட்டுப் போறது” என்பாள். வந்தவர்கள் வேறு வழியில்லாமல் கொஞ்சம் கொடுத்துவிட்டுத்தான் நடப்பார்கள். பெரும்பாலும் சீனிச்சேவு, காரச்சேவு, திராட்சை, பலாப்பழம், கொய்யா இருக்கும்.”வேண்டாம் வேண்டாம்’’ என்றுவிட்டு ஆளாளுக்கு கொஞ்சம் எடுத்துக்கொள்வார்கள். வேகமாக யாராவது நடந்தால்,”என்ன வேகம் கூடுதலா இருக்கு. பத்து மணி பஸ்ல வந்து இறங்குவேன் தயாரா இருன்னு சொல்லிட்டுத்தான் வெளியூர் போனிய போலருக்கு” என்பாள். சிரிப்பு கிளம்பி அடங்க வெகுநேரமாகும்.

அப்படி இப்படி கொஞ்சம் பொழுது கழியும். காற்று கூதலோடு வீசத் தொடங்கும்போது பேச்சு களை கட்டும், ஆந்தை அலறல் கேட்கும். ஊரில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் கிழவிகளின் வாயில் கடிபடுவார்கள். சோகம், சந்தோஷம், கோபம் என்று பல உணர்வுகள் பொங்கி வழியும். ஒரு கட்டத்தில் அவர்கள் பேச்சுக்கு ஈடு கொடுக்க முடியாமல்,”காலைல சீக்கிரம் எழுந்திருக்கணும்” என்பாள் வடிவு. பின் அவர்கள் கலைவார்கள்.

வடிவு நடைவாசலுக்கு வருவது, அவர்களோடு பேச்சில் கலந்துகொள்வதெல்லாம் கொஞ்ச நாளாகத்தான். ஏன் இந்த மாற்றம் என்பதைக் கருப்பாயிதான் முதலில் யோசித்தாள். பின் ஒவ்வொருவரிடமும் அதே கேள்வி இருப்பதை அறிந்துகொண்டாள். எல்லோருமாகச் சேர்ந்து, அந்த ஒரே விஷயத்தை யோசித்தும் காரணம் பிடிபடவில்லை. ஏன் ஏனென்று இன்னும் ஆர்வம் தந்தது. ‘எதற்குப் பெரிய இடத்துப் பொல்லாப்பு’ என்று பூவு ஒதுங்கிக்கொண்டாள். ஆனால், கருப்பாயிக்கு இருப்புக் கொள்ளவில்லை. ‘யோசித்து யோசித்துப் பார்த்தாள். இத்தனை வருடமாக வாசலுக்கே வராதவள். அளந்து அளந்து அபூர்வமாகப் பேசுபவள், எல்லோரையும் முந்திக்கொண்டு வாசலுக்கு வருவது ஏன்?’ என்று ஆன வழிகளிலெல்லாம் யோசித்துத் தோற்றாள். மதியச் சாப்பாட்டு வேளைகளில் வடிவை வலுக்கட்டாயமாக சந்தித்தாள். அப்படியும் இப்படியும் பேசி எதாவது ரகசியம் கசிகிறதா என்று பார்த்தாள். வடிவு அதற்கு இடமே கொடுக்காமலிருந்தாள்.

வடிவுக்கு ஒன்று மட்டும் தெரிந்திருந்தது. அந்த இரவுக் கூடிக் குலாவலில் ஊரின் எல்லோர் ரகசியங்களும் எப்படியாவது வந்து விடுகின்றது என்பதே அது. தன்னைப் பற்றி அவர்கள் பேசுகிறார்களா? என்று கிராதிக் கம்பிகளுக்குப் பின் இருட்டில் அமர்ந்து பேன் சீப்பால் தலை வாரிக்கொண்டு காத்திருந்து காதைக் கூர்மையாக்கிக் கேட்டுப் பார்த்தாள். சுத்தமாக அவள் பேச்சு ஏதும் இல்லை. நாள் கணக்கில் காத்திருந்தும் இல்லை. அதன் பின்தான் அவளது வெளிப் பிரவேசம்.

ஆரம்பத்தில் கிழவிகள் வடிவிடம் நெருக்கம் காட்டாமல் அமைதியாகத்தான் இருந்தார்கள். பணக்காரி. அவள் மன ஓட்டம் எப்படி என்று தெரியாது. எதாவது வருத்தம் வந்துவிட்டால் அவளிடமிருந்து கிடைக்கும் உதவிகள் நின்று போகும் என்றெல்லாம் யோசித்து, அவள் தன்னை நெருக்கமாக்கிக் கொண்டபிறகுதான் மெல்ல மெல்ல அவளைச் சேர்த்துக்கொண்டார்கள். அவர்களோடு ஒன்றாகியதும் அவள் சிரிப்பின் கனம் கூடிற்று. தெருப் புழுதியைச் சுருட்டிக் கொண்டு வரும் சூறைக் காற்றிலும் காற்றோடு கலந்து வந்து நனைத்துப்போகும் சாரலிலும் அடித்து தெருவில் ஆறாய் ஓடும் அடை மழைக் காலத்திலும் அவர்கள் பேசினார்கள். சில நாள் சோளப் பொறி, சிலநாள் வேர்க் கடலை, ஒருநாள் கடலை தேங்காய் என்று வடிவு கையோடு எடுத்து வருவாள். மரணம், கல்யாணம். கோவில் கொடை, வெளியூரிலிருப்பவர்கள் வருகை, குடும்ப சண்டைகள், கைகலப்புகள் என்று அவர்கள் பேசிக் கொள்ள அன்றாடப் பாடுகள் எதாவது ஊரில் இருந்தன. ஆனால், வடிவின் வருகை பற்றிய காரணம் கிழவிகளுக்குக் கிடைத்தபாடில்லை என்பதால் எல்லோருக்கும் அதன் மீது ஒரு கண்ணிருந்தது.

ண்டி மாம்பழக்காரனை தெருவில் நிறுத்திவிட்டு கருப்பாயி வடிவிடம் சொல்லப் போனாள். அவன் வந்தால் சொல்லச் சொல்லியிருந்தாள். வடிவுக்கு ஏனோ அந்தப் புளிப்பும் கடித்ததும் நாக்கில் ஏறும் சுரீரென்ற உணர்வும் பிடித்திருந்தது. முன் வாசல் அடைத்துக் கிடந்தது. ஒட்டிய இரண்டாவது வீட்டு வாசலுக்குப் போனாள். வடிவு பேசிக் கொண்டிருந்தாள். யாருடன் என்று தெரியவில்லை. எதிரிலிருந்து பதில் சத்தமில்லை. அதை அவள் எதிர்பார்க்கவுமில்லாதது போல வேகமாக ஒப்பித்து கொண்டிருந்தாள்.”கடையநல்லூரிலிருந்து மிளகாய் வியாபாரி வந்தார். விசாரித்தார். நாளை வருவதாகச் சொன்னார். தென்காசி நெல் வியாபாரி வந்து பணம் கொடுத்து விட்டுப் போனார்” என்று வடிவு மட்டும் தனியே பேசிக் கொண்டிருப்பதாகக் கருப்பாயி முதலில் நினைத்தாள். அதன் பின்னர் அவள் வடிவின் குரல் சென்ற திசையைப் பார்த்த போது, சற்று தள்ளி வடிவின் கணவர் அமைதியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வடிவின் குரலில், கணவனோடு பேசும் எந்த உணர்வும் இல்லை. அவரும் ஒரு வானொலிச் செய்தியை கேட்டுக் கொண்டிருப்பது போல கேட்டுக் கொண்டு தலையாட்டியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நிற்பதா போவதா என்ற குழப்பத்திலிருந்த கருப்பாயியை வடிவு கவனிக்கவில்லை.

ரகசியத்தின் ஒரு முனையைக் கண்டுகொண்ட சந்தோஷம் கருப்பாயியைக் கிறுகிறுக்க வைத்தது. அங்கு இன்னும் நிற்பது மரியாதையாக இருக்காது என்று திரும்பி வந்துவிட்டாள். வடிவுக்குக் கொடுக்க தன் காசில் சில அண்டி மாம்பழங்களை வாங்கிக்கொண்டாள்.

வடிவும் புருஷனும் பேசிக் கொள்வதில்லை என்ற விஷயத்தை யாரோ சொல்லிக் கேள்விப்பட்டதாக கருப்பாயி முதலில் கிழவிகளிடம் கசியவிட்டாள்.”வாய் இருக்குன்னு என்னவெல்லாம் பேசறாளு; அவங்களுக்குள்ள என்ன சண்ட வந்துறப் போகுது” என்று கிளறி விட்டாள். அன்றிரவின் சந்திப்பில் வடிவுக்கு கருப்பாயி அண்டி மாம்பழங்களைக் கொடுத்தாள்.”எப்போ வாங்கினிய? என்ன கூப்புட்டிருக்கலாமே, நா இங்கதான இருந்தேன்?” என்று கேள்விகளாகக் கேட்ட வடிவு, வீட்டுக்கு கருப்பாயி வந்து போனதைக் கண்டுபிடித்து விட்டாள். அதன்பின் இறுக்கமான மௌனமே வடிவிடம் இருந்து வந்தது. கிழவிகள் அதை உணர்ந்து பேச்சை வேறு பக்கம் திருப்பினார்கள். அடுத்த நாள் அவள் வரவில்லை. அவர்களும் அது குறித்துப் பேசவில்லை.

வடிவு, வழக்கம்போல வராண்டா தாண்டிய கிராதிக் கம்பிகளுக்குப் பின் இருந்து, அமைதி காத்து காதுகளைக் கூர்மையாக வைத்திருந்தாள்.”வடிவ காணல தூங்கிட்டா போலருக்கு’’ என்று ஒரு குரல் மட்டும் ஒலித்தது. மறுநாள் கலந்து கொண்டவள்,”ஒரே அலுப்பு சீக்கிரமே நேத்து தூங்கிட்டேன்’’ என்று அவர்கள் சொன்னதையே அவர்களிடம் சொன்னாள். கருப்பாயிக்குப் பொய் புரிந்து போய்விட்டது.

பின்னொருநாள், வடிவு அண்டி மாம்பழங்களை வாங்குவதைக் கருப்பாயி பார்த்தாள். அருகே சென்றாள். அவளுக்கும் நான்கு கிடைத்தது.”சாப்பிடாச்சா? என்ன சமையல்?’’ என்றெல்லாம் விசாரித்தாள். அது புதிதாக இருந்தது. ஒன்றைத் தொட்டு இன்னொன்றை இழுத்து வடிவு பேசிக்கொண்டே போனாள். அதுவும் புதிதாக இருந்தது.”அவுஹ வீட்ல இல்லையா?’’ என்று கருப்பாயி ஆர்வம் தாளாமல் கேட்டாள்.”குளிக்காஹ’’ என்றாள் வடிவு உப்புச் சப்பில்லாமல். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

சம்பந்தமில்லாமல் வடிவு புன்னகை பூத்தாள். கருப்பாயியும் சிரித்து வைத்தாள். தெருவில் போன யாரையோ வடிவு வலுக்கட்டாயமாகக் கூப்பிட்டுப் பேசினாள். இடையே தன்னைக் கருப்பாயி கவனிக்கிறாளா என்றும் பார்த்துக் கொண்டாள். அன்றிரவு வாசலுக்கு வந்த வடிவு பேச்சில் கலந்துகொள்ளாமல் அமைதியாக இருந்தாள். அன்று எல்லோருக்குள்ளும் அமைதி குடிகொண்டுவிட்டது. அவரவர் எதையெதையோ யோசித்தவண்ணம் அமைதியாக இருந்தார்கள். நான்கைந்து நாய்கள் ஓடி வந்தன. கூடலுக்கு தயாரான நாய்களின் மீது பூவு,”எங்கன வந்து” என்றபடி கல்லை எடுத்து எறிந்தாள்.”பூவுக்குப் பொறாமை’’ என்று யாரோ சொன்னார்கள். அப்போது மட்டும் சின்ன சிரிப்பு எழுந்து, அதே வேகத்திலேயே காணாமலும் போய்விட்டது.

வடிவு திடீரென எழுந்தாள், ”வரேன் அவுஹ வேலையா நாள மதுரைக்குப் போறாஹ” என்றுவிட்டு வேகமாக நடந்தாள். அவள் வந்த நாளிலிருந்து அப்படி இடையில் போவது அதுதான் முதல் முறை. அதன் பின்னர் அவர்களும் கலைந்தார்கள்.

பகலில் சமைத்த பெண்கள் கருப்பாயி வீட்டில் தாயம் விளையாடக் கூடினார்கள். பூவு சில செய்திகளை விசாரித்து வந்திருந்தாள். வீட்டு வேலைக்கு ஒத்தாசை செய்ய வடிவு வீட்டுக்குள் வந்துபோன செல்லக்காவை வடிவு கோபமாக திட்டிக் கொண்டிருந்தாள் என்றும், யாரோ பார்த்த போது ஒன்றும் நடவாதது போல அமைதியாகிவிட்டாள் என்றும் தகவல் சொன்னாள்.

“காசு பணத்ல கைய வச்சிருப்பா. அவள பத்தி ஊருக்கே தெரியும். அவள எதுக்கு வீட்டுக்குள்ள விடுதா’’ என்று கருப்பாயி பேச்சை முடித்துவிட்டாள்.

அன்றிரவு கணவர் ஊரில்லாததால் வடிவு சீக்கிரம் வருவாள் என்று எதிர்பார்த்தார்கள். அவள் எல்லோருக்கும் கடைசியாகத்தான் வந்தாள்.”வேலையா?’’ என்று கேட்டபோது அமைதியாக இருந்தாள். பக்கத்து அரச மரத்து இலைகளில் காற்று சலசத்துக் கொண்டிருந்தது. ஊரில் புதிய செய்திகளில்லை. ரேஷன் கடையில் அன்று மாலை பிரித்த அரிசி மூட்டையில் அரிசி நன்றாக இருப்பதாக பூவு சொன்ன போது, காலையில் முதல் ஆளாகப் போய்விடும் முடிவைக் கருப்பாயி எடுத்தாள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு பூவு கேட்டாள்.”செல்லக்கா வீட்ல எதாவது கை வச்சிட்டாளா? அவ கை கொஞ்சம் நீளம். யாரும் அவள கிட்ட சேக்க மாட்டோம்,” என்பதற்குள் வடிவு அழுது விட்டாள். விசும்பி விசும்பி அழுதாள். எல்லோரும் திடுக்கிட்டுப் பார்த்தார்கள்.”கொஞ்சம் நீளமாத்தான் செல்லக்கா கைய வச்சுட்டா. தரிக்கணும்” என்று விசும்பினாள்.

“நீ அவள திட்டிக்கிட்டு இருந்தத யாரோ பாத்ததா சொன்னாங்க” என்று கருப்பாயி சொல்வதற்குள்,”வேற யாரு பாத்தா, பூவுதான் பாத்தா” என்ற போது,”அப்படி திட்டற அளவுக்கு என்ன செஞ்சா செல்லக்கா’’ என்று பூவே பேச்சைத் தொடர்ந்தாள்.

“என்னத்த சொல்றது. அன்னிக்கு வெந்நிப் பானைய தூக்கி அங்கணத்ல வச்சுட்டு, அம்மி குத்தறவன் சத்தம் கேட்டுச்சேன்னு வெளில வந்தேன். இந்த வீட்டுக்குப் போனான், அந்த வீட்டுக்குப் போனான்னு ஆளாளுக்குச் சொன்னாஹ. அங்கனயும் இங்கனையுமா அலைஞ்சுட்டு அவனப் புடிக்க முடியாம வீட்டுக்குள்ள போறேன், மாட்டுக்கு தண்ணி வைக்க வந்த செல்லக்கா அவுஹளுக்கு முதுகு தேய்ச்சு விட்டுக்கிட்டு இருக்கா” என்று விம்ம….

“என்ன சொல்லுத வடிவு, வெளக்குமாத்த எடுத்து நாலு சாத்து சாத்த வேண்டியதுதான” என்றாள் கோபமாக கருப்பாயி.”யாரச் சாத்தச் சொல்லுத அவளையா அவுஹளையா?”

கனத்த மௌனம் அங்கு உருவானது. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தார்கள். வடிவு விசும்பிக் கொண்டேயிருந்தாள். ஆளாளுக்கு அவள் கையைப் பிடித்தார்கள்.

“அவகிட்ட கேட்டியா?’’

“கேட்டேன். நா வந்தேன். ஏழா வா வந்து முதுகு தேய்ச்சு விடுன்னு அவுஹதான் கூப்புட்டாஹ. ஐயா கூப்புடும்போது மாட்டேன்னு சொல்ல முடியுமான்னு சொல்லுதா?”

“நெசமாவ சொல்லுத. அவுஹ அப்படியெல்லாம் கூப்பிடுத மனுஷனா? கேக்க வேண்டியதுதான.”

“அவுஹ கிட்ட கேக்காம விடுவனா. கேட்டேன். நீ நிக்கன்னு நினைச்சுக்கிட்டு முதுகு தேயுன்னு கூப்புட்டேன். அவ வந்து நிக்கா. நா, அம்மணக்கட்டையா நிக்கேன். நீ எங்க போயித்தொலஞ்சன்னு கோபப்படுதாஹ. என்னத்த சொல்ல.”

“அறிவு கெட்டவ. கூப்பிட்டா போயிருவாளா அவ. இந்தப் பக்கம் வரட்டும் நல்லா கேக்கேன்” என்று ஆவேசப்பட்டவர்களிடம், வடிவு,”யாரும் எதுவும் பேச வேண்டாம். இந்த விஷயம் தெரிந்ததுபோலக் காட்டிக் கொள்ளவும் வேண்டாம்” என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டாள்.

எல்லோருக்கும் அவள் மீது வருத்தமும் முன்னெப்பொதுமிருந்ததைவிட அதிகமான பிரியமும் உண்டாயிற்று. அதன் பின் வடிவு வாசலுக்கு வருவதும் வந்தால் முன்புபோல கலகலப்பாகப் பேசுவதும் குறைந்து பின் நின்றே போயிற்று.

 

தெல்லாம் நிகழ்ந்த சில வாரங்களில், சுள்ளென்று வெயிலடித்த கோடை காலத்தின் ஒரு வெம்மைப் பொழுதில் வடிவு வீட்டுக்கு கருப்பாயி மோர் வாங்கப் போனாள். பெரிய பித்தளைச் சொம்பில் தண்ணீர் மோந்து ஆரடி உயர வடிவின் கணவர் குளிக்கும் நீர்ச் சத்தம் அருவிச் சத்தம் போலக் கேட்டது. அங்கனத்தை நோக்கி நீள நிழல் விழ, வடிவுதான் என்று நினைத்து முன்னே போகப் போன கருப்பாயி முன் நிழலை தொடந்து போகும் செல்லக்காவைப் பார்த்தாள். நீர்ச் சத்தம் நின்று பேச்சுச் சத்தம் தொடர, நடுக்கம் கண்ட கருப்பாயி திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவள் தன் வீட்டிலிருந்து வெளியேறுவதைப் பலசரக்குக் கடையிலிருந்து எதோ வாங்கிக் கொண்டு வந்த வடிவு பார்த்தாள்.

அன்றிரவு அனைவரும் கூடினார்கள். அமைதியாக இருந்தார்கள்.”என்ன சத்தத்த காணல” என்று வந்த வடிவுதான் ஆரம்பித்தாள். எல்லோரும் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தார்கள்.

“மத்தியானம் மோர் வாங்கலாம்ன்னு வந்தேன்…’’ கருப்பாயி மெல்ல பேச்சை ஆரம்பித்தாள்.

“தெரியும், பாத்தேன். நா வெளில வந்தேன். ரொம்ப நாளா அவஹ குளிக்கும்போதெல்லாம் எதாவது சாக்குப் போக்குச் சொல்லி வெளிலதான் வந்துக்கிட்டிருக்கேன்.” அவள் பேச்சு கமறியது.

“செல்லக்காவ சும்மா விடக் கூடாது. அன்னிக்கே சொன்னேன் நீதான் கேக்கல.” பூவு கொதித்தாள்.

“அவள குறை சொல்லி என்ன பண்ணச் சொல்லுத. தப்பு அவ கிட்ட மட்டுமா இருக்கு.” வடிவு தீவீரமாகப் பேசினாள்.

“அப்ப இப்படியே விட்டுடப் போறியா? கண்டும் காணாமலும் இருந்துரப் போறியா?’’

“உங்களுக்கு தெரியாததா? செல்லக்கா புருஷன் ரோஷக்காரன். அவங்கிட்ட சொன்னா வெட்டிப் போட்டுருவான். பாவம் மூணு புள்ளைங்க… அதுங்கள நினைச்சுப் பாத்தேன்.” வடிவு தீவீரத்துடன் சொன்னாள்.

“என்ன இருந்தாலும்…’’

“தப்புன்னு தானா தெரியணும். அதுக்கு ஒரு நேரம் வரும். அவுஹளோட பேச்சுவார்த்த கிடையாது. அவள ஜாட மாடையா திட்டி விட்டேன். அவ வரத நிறுத்தினா, அவுஹ ஆள் அனுப்ப, அவ புருசனே ஐயா கூப்பிட்டாஹன்னு அனுப்பி விடுதான். எனக்கும் கோபம் வருது. என்ன செய்ய. நா அவளோட புள்ளைகளத்தான் நினைச்சுக்கறேன். பாவமில்லையா? அவ இல்லன்னா அதுங்க என்ன ஆகும்.”

“நீ அதுங்களுக்காக பாவம் பாத்தா உன் வாழ்க்கை என்ன ஆகும் வடிவு. செல்லக்கா புருஷன் கோபத்துல அவுஹ மேல கைய வச்சு, ஒண்ணு கெடக்க ஒன்ணு ஆயிடுச்சுன்னா உன் வாழ்க்கை என்ன ஆகும்.?”

“இனி எனக்கு என்ன வாழ்க்கை. என்ன எடுத்துக்கோன்னு சாமிய கும்பிடுதேன். என்னால ஒருத்தி சாவணுமா, மூணு புள்ளைங்க அனாத ஆகணுமா. விடுங்க வேற விஷயம் எதாவது பேசுவோம். உங்க கூட பேசி சிரிச்சுதான் மிச்ச காலத்த ஓட்டணும்.’’

“எப்படியும் எதாவது ஒருநாள் தெரியத்தான போகுது.”

“நீங்க யாராவது சொன்னாத்தான் தெரியும். யாரும் எனக்காகச் சொல்லாதீங்க. ஆரம்பிச்ச மாதிரியே அது முடியும். எம்புட்டு தூரம் போயிரும், ரொம்ப தூரமெல்லாம் போக முடியாது” என்று வடிவு சூழலைச் சகஜமாக்கினாள்.

ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியா இருளில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். வடிவின் கண்ணீர் மெல்லக் கசிந்து வழிந்தது. அவள் துடைத்துக்கொள்ளும்போது நாவில் பட்டு உப்புக் கரித்தது. தனக்கு நெருக்கமானவர்களுடன் அமர்ந்திருந்த அவளுக்குத் தொடர்ந்து அழுது கொண்டேயிருக்கவேண்டும் போலிருந்தது.

ஜெகநாத் நடராஜன் <jaganathanvr4@gmail.com>

Jaganath Natarajan

 

 

Amrutha

Related post